சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய காதலனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார்.
மதுரை மாவட்டத்திலுள்ள மணப்பட்டியில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரம்யாவும் பக்கத்து ஊரில் வசிக்கும் அழகு ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற அழகுராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யா கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அழகுராஜா தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். பின்னர் ராஜா மீண்டும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டார். கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அழகுராஜாவை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த அழகுராஜா ரம்யாவை சிறை வளாகத்தில் இருக்கும் காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.