சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ்.பிரணாய் போன்றோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கின்றனர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வியட்நாம் வீராங்கனையுடன் மோதிய பி.வி.சிந்து 19-21 என முதல்செட்டை இழந்தாலும், பிறகு 21-19, 21-18 என்று அடுத்த இருசெட்களை கைப்பற்றி வெற்றியடைந்தார். இதன் வாயிலாக பி.வி.சிந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோன்று சீனவீராங்கனை ஹி பிங் ஜியோவுடன் மோதிய சாய்னா நெஹ்வால், 58 நிமிடங்கள் போராடி 21-19, 11-21, 21-17 எனும் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
அண்மை காலமாக சர்வதேச போட்டியில் பெரிதாக சோபிக்காத சாய்னா, வெகுநாட்களுக்கு பின் சர்வதேச ஆட்டத்தில், கால் இறுதிக்கு முன்னேறி அசத்தி இருக்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சீனதைபே வீரர் சோ டின் சென்னுடன் மோதினார். இதில் 14-21, 22-20, 21-18 எனும் செட்களில் பிரணாய் வெற்றியடைந்து காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.