சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறத்தில் வருடம்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மஞ்சுவிரட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து இளவட்ட மஞ்சுவிரட்டு இந்த வருடம் நடத்த விழாகுழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு காடு இரண்டு மாதமாக சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் மஞ்சுவிரட்டு கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சேவுக பெருமாள் அய்யனார் கோவிலுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு, அதன் பின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் திருச்சி, இராமநாதபுரம், மதுரை, கரூர், சிவகங்கை, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் கலந்து கொண்டனர். இதில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள். மேலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மஞ்சுவிரட்டை பார்க்க அங்கு திரண்டனர். இதில் காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களிடம் பிடி படாமல் தப்பி ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் 30 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.