கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன்குளம் பகுதியில் காஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் ஜெனிஷ்(24) சென்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அருண் தனது சித்தப்பாவான சுரேஷ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நூலகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அருண் தனது சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருண் கூறியதாவது, எனது தாய், தந்தையை முன்விரோதம் காரணமாக எனது சித்தப்பா அரிவாளால் வெட்டியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இது தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு சித்தப்பா என்னிடம் கூறினார். அதற்கு தந்தையிடம் இதுகுறித்து பேசலாம் என கூறினேன். ஆனால் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவரையும் உயிரோடு விட மாட்டேன் என சித்தப்பா மிரட்டினார். இதனால் சித்தப்பாவை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கான சந்தர்ப்பம் வருவதற்காக காத்து கொண்டிருந்தேன். வழக்கை வாபஸ் பெறுவது குறித்து மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, அவரை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். அருணைபோலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.