ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் சித்தப்பாவை வாலிபர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியை நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் சேகர் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பகல் நேரத்தில் ஆடுகளை மேய்க்கும் சேகர் இரவு நேரத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சேகரின் அண்ணன் மகனான அண்ணாமலை என்பவர் கல்குவாரியில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கல்குவாரியின் மேல் பகுதியில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அண்ணாமலை ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அந்த நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க அனுமதி தருமாறு சேகர் அண்ணாமலையிடன் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து அந்த இடத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் கோபத்தில் அண்ணாமலை சேகரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது