மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேர்த்திருவிழா போன்றவை முடிவுற்ற நிலையில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று திரும்பும் வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.