இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்-2 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது “தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக சித்த மருத்துவ பல்கலை கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அலுவல் கூட்டத்தை முதலமைச்சர் இன்னும் 10 நாட்களில் திறந்து வைக்க இருக்கிறார்” என்று கூறினார்.