2 கோடி ரூபாய் மதிப்பிலான சிந்தடிக் விரிப்புகள் தீயில் கருகி நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்தில் மேல் பரப்பில் விரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சிந்தடிக் விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சிந்தடிக் விரிப்புகள் மீது தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் புகைமூட்டம் நிலவியுள்ளது.
இதுகுறித்து கோவை வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இந்த சிந்தடிக் விரிப்புகளின் மதிப்பு ரூபாய் 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஹாக்கி வீரர்கள் இதுபோன்ற சம்பவம் 3 முறை நடந்துள்ளதாகவும், இதனால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.