மதுரை மாவட்டத்தில் கோபால் – சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கோபால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்துவிட்டு விவசாயத்திற்கு திரும்பியுள்ளார். இந்த தம்பதியினர் குறைந்த அளவு இடத்தில் காளான், தென்னை மரங்கள், பிற பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த அனுபவம் குறித்து கோபால் மற்றும் சாந்தி தம்பதியினர் கூறியுள்ளனர். அதாவது இவர்கள் மிளகரணை கிராமத்தில் 1 ஒரு ஹெக்டேர் நிலம் வாங்கி அதில் முதலில் 30 தென்னை மரங்களை நட்டு வைத்துள்ளனர்.
அதன்பின் ஒரு குடில் அமைத்து அதில் வைக்கோலை பதப்படுத்தி வைத்து காளான் வளர்த்துள்ளனர். இதன் மூலம் தினமும் 10 கிலோ காளான் வரை கிடைக்கிறது. இந்த காளான் அறுவடை முடிவடைந்த பிறகு வைக்கோல் சக்கையை குளத்தில் நன்கு ஊறவைத்து தென்னந்தோப்பில் மூடாக்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த வைக்கோல் உரமாகவும் நீர் ஆவியாகாமல் வெளியே செல்வதை தடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இதனால் நன்கு தரமான இளநீர் கிடைக்கிறது. இதன் காரணமாக ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உரமாக பயன்படுத்த ஆரம்பித்தேன்.
அதன்பிறகு தோட்டக்கலைத்துறை மூலமாக அரை ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டேன். இந்த அறுவடை நன்றாக இருந்த போதும் மழை பெய்ததால் சிறிது நஷ்டம் ஏற்பட்டது. அதன்பிறகு மீன்வளத்துறை மூலமாக மீன் வளர்க்கும் பயிற்சியை கற்றுக் கொண்டு குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். இதற்காக 10 சென்ட் இடத்தில் சிறிய அளவு குட்டையை வெட்டினேன். இந்த குட்டையில் மீன் வளர்ப்பதற்காக மீன்வளத்துறை 2500 சிறிய மீன் குஞ்சுகள் மற்றும் 20,000 ரூபாய் மதிப்பிலான தீவனங்களை இலவசமாக தந்தனர்.
இதன் மூலமாக 76 பேர் ஒரே நேரத்தில் மீன்வளத்துறை மூலமாக மானியம் பெற்று குட்டையில் மீன் வளர்க்கும் பணியை ஆரம்பித்தோம். எங்களுடைய குட்டையில் வளரும் மீன்கள் மற்றவர்கள் வளர்க்கும் மீன்களை விட அதிக அளவு எடை இருப்பதாக மீன்வளத் துறையினர் கூறினர். இதைக் கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு உண்மையான காரணம் மீன்வளத்துறை தந்த உணவை விட நான் கூடுதல் உணவை மீன்களுக்கு கொடுத்தேன். இதன் காரணமாக தற்போது மீன்கள் அரை கிலோ எடை வரை வளர்கிறது. இதனால் கூடுதலாக 3 குட்டைகள் அமைத்து மீன் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
இதனையடுத்து காளான் பேக்கிங் செய்வதற்காக விவசாயத்துறை மூலமாக ரூபாய் 2 லட்சம் மானியத்தில் பெற்று குடில் அமைத்து வருகிறேன். இதில் காளான் மற்றும் மீன் போன்றவற்றை பேக்கிங் செய்யலாம். அதன்பிறகு 100 விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் மூலம் அரசிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் மானியம் பெற்று 2 பவர் டிரில்லர் மற்றும் 2 களையெடுக்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இதற்காக கூடுதலாக நிலம் தேவை இல்லை. இதற்கு பதிலாக நெற்பயிர்களை ஒரே இடத்தில் மாற்றி மாற்றி நடுவதை விட, கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய இரண்டையும் ஒரே நிலத்தில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதை மற்ற விவசாயிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார்.