தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இமானுவேல் ராஜா (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு முகநூல் மூலம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அந்த பெண்ணிடம் தான் ஒரு சினிமா இயக்குனர் எனவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் இமானுவேல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில் நேரில் பார்க்க வேண்டும் என கூறி இம்மானுவேல் அந்த இளம்பெண்ணை நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் சந்தித்து கொண்ட போது சினிமா வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக இம்மானுவேல் கூறியுள்ளார். அதற்காக இளம்பெண்ணிடம் இருந்த 17 பவுன் நகைகளை இமானுவேல் ராஜா வாங்கி கொண்டார். இதனையடுத்து அந்த இளம்பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது இம்மானுவேல் போனை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த இமானுவேல் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.