கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ எடுத்து அனுப்பினால் இயக்குனர்களிடம் அதனை காண்பித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என வாலிபர் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு போட்டோவும் எடுக்க தெரியும் என அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண் போட்டோ எடுப்பதற்காக வீட்டிற்கு வருமாறு அந்த வாலிபரை அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அலங்காரம் செய்வதற்காக அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனை பயன்படுத்திய வாலிபர் வீட்டில் இருந்த 8 1/2 பவுன் தங்க நகை, செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அறையில் இருந்து வெளியே வந்த இளம்பெண் நகை மற்றும் செல்போன் காணாமல் போனதை கண்டு உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.