கடந்த 2015ம் வருடம் வெளிவந்த “சைன்மா” என்ற குறும்படத்தின் வாயிலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. இதையடுத்து 2017ம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் பெரும் வரவேற்பை பெற்றதன் மூலமாக இவர் பிரபலமானார். அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து அல வைகுந்தபுரமுலோ, ஜதிரத்னலு உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “ஸ்கைலேப்” படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது ராஜமௌலி இயக்கிய “ஆர்ஆர்ஆர்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராகுல் ராமகிருஷ்ணா நடித்து இருக்கின்றார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ராகுல் ராமகிருஷ்ணா திரைத் துறையிலிருந்து விலகுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “2022ஆம் வருடம்தான் எனக்கு கடைசி. ஆகவே இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது தொடர்பாக எனக்கு கவலை இல்லை. இதனால் யாரு கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஒரு நடிகர் திடீரென்று சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..