கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றதால் அச்சத்தில் நேரு வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர் வைத்திருந்த பையில் கையுறை பிளேடு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் செல்வராஜ் அவருடன் வந்த செல்வகுமார், விஜி ஆகிய 3 பேரும் இணைந்து டேனியல் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு பூட்டி கிடக்கும் வீடுகளுக்குள் நுழைந்து திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செல்வராஜை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வகுமார் மற்றும் விஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.