12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் முத்தம்மன் நகர் முதல் தெருவில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலீப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அறைக்குள் தூங்குவதற்காக சென்ற திலீப்குமார் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது திலீப்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.