Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன பிள்ளை மாதிரி…. பூச்சாண்டி காட்டாதீங்க… நாங்க தான் ஆட்சிக்கு வருவோம்… எடப்பாடிக்கு அட்வைஸ் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், நாடாளுமன்றம் என்பது அரசியல் அமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ள மாண்புமிகு அவை. அதேநேரத்தில், மாதிரி நாடாளுமன்றம் என்ற பெயரில் கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் நாடாளுமன்றம் என்ற அமைப்புகள், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்காக, நாடு முழுவதும் இயங்குகின்றன. அதுபோலத்தான், தி.மு.கழகம் நடத்துவதும் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள். உண்மையாக நடத்த வேண்டியவர்கள்,

உரிய காலத்தில் உரிய முறையில், நடத்தத் தவறிய காரணத்தால் – மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளப் பயப்படுவதால், மாதிரி கிராமசபைகளை தி.மு.கழகம் நடத்துகிறது. அது தற்போது, மக்கள் கிராமசபையாக – மக்கள் வார்டு சபையாக உருவெடுத்திருக்கிறது. கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள் என எங்கெங்கும் மக்கள் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி தி.மு.க.வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள்; நாளை இருக்கப் போகிறவர்கள். சட்டத்தை அறிந்தவர்கள்; அதனைப் பெரிதும் மதிப்பவர்கள். பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் தி.மு.க.வை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது எனக் கிராமப்புறங்களில் சொல்வார்கள். அந்தக் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் உங்கள் ஆட்சிக்கு எதிராகக் குமுறத் தொடங்கிவிட்டனர்; எரிமலையாய்க் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் வாயை மூடலாம் என நினைத்து, தி.மு.க.வின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கழகத்தின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி!”இவ்வாறு மடலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |