மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவர்களுக்கான பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2020 பொது தேர்வு எழுதும் மாணவ- மாணவியரை வாழ்த்துகிறேன்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் வழிகாட்டியாகவும், ஊக்குவிக்கவும் வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி (அதாவது இன்று) தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது.
முக்கிய பாடங்களுக்கான தேர்விற்கு தயாராக போதுமான கால இடைவெளிகள் தேர்வு அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான தகவல் மற்றும் வழிமுறைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறை கண்காணிப்பாளர் தேவையான அறிவுரைகளை வழங்குவார்.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 20 ஆயிரத்து 398 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 878 மாணவர்கள் எழுத உள்ளனர்.
அவர்களில் 7 லட்சத்து 88 ஆயிரத்து 195 மாணவிகளும், 11 லட்சத்து ஆயிரத்து 664 மாணவர்களும் ,19 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் ஐந்தாயிரத்து 376 தேர்வு மையங்களில் தேர்வுயெழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 13,119 பள்ளிகளில் படித்த 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 மாணவர்களும் எழுதுகின்றனர். அவர்கள் ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 819 மாணவிகளும், ஆறு லட்சத்து 84 ஆயிரத்து 68 மாணவர்கள் ஆவார்கள். ஆறு பேர் மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 4,983 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தேர்வு எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்வு வழிகாட்டு நெறி முறைகளை பயன்படுத்தி சிறப்பாக தேர்வு எழுத வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது