தாம்பரம் சானடோரியத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்கி கௌரவித்தார்.
சென்னை மாவட்டம், தாம்பரம் சானடோரியத்தில் இருக்கின்ற மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2019-20 ஆம் வருடத்திற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களை மெப்ஸ் மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் வரவேற்றுள்ளார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் மத்திய வர்த்தக, தொழில் துறை இணை அமைச்சர் அனுபிரியாசிங் படேல், தமிழக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது, தமிழ்நாடு தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பை பெற்று சிறந்து விளங்குகிறது. நாட்டின் முன்னோடியாக தமிழகம் ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருட்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நாட்டின் மூன்றாவது ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் வலுவான கட்டமைப்பு, 4 சர்வதேச விமான நிலையங்கள், மூன்று மிகப்பெரிய கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.
இதனையடுத்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தமிழகம் தொழில் துறை வளர்ச்சி, ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலை 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை நேரடியாக கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.