சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. தற்போது டாக்டர் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோவிட் காலத்தில் சிறந்த சிரிப்பு மருந்தை டாக்டர் எங்களுக்கு வழங்கினார். நெல்சன் திலீப்குமாருக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும் படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி’ திரையரங்க அனுபவம் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, ‘டாக்டர் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அற்புதமாக இருந்தது’ என பதிவிட்டுள்ளார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ‘உருண்டு உருண்டு சிரித்தேன். கண்ணுல தண்ணி வரவர சிரித்தேன். நெல்சன் ஒரு சிறந்த எழுத்தாளர். அனிருத் இந்த படத்தின் முதுகெலும்பு. யோகி பாபுவும், டோனியும் சிரிப்பு டாக்டர்கள்’ என தெரிவித்துள்ளார். இயக்குனர் ரத்னகுமார், ‘டாக்டர் படம் நின்னு பேசும் . சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படம். வழக்கம்போல அனிருத் பின்னணி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன், ‘குடும்பத்துடன் டாக்டர் படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்கு படத்தை அளித்த நெல்சனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தமன், ‘உண்மையான டாக்டர்கள் இரவு பகலாக போராடி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியுள்ளனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் திரையரங்குகளை குணப்படுத்தியுள்ளது’ என பதிவிட்டுள்ளார் .