திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் கோவிலில் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பான வஸ்திரங்கள் அணிவித்தும் பல்வேறு ஹோமங்கள் வளர்த்தும் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் சாமிக்கு பூணூல் கட்டுதல், காப்பு கட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி அம்மாள் திருக்கல்யாணத்திற்கு வேண்டிய சீர் வரிசைகளை கோவில் நிர்வாகம் சார்பாக எடுத்து வந்துள்ளார். அதன்பின் மதியம் 12 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்துள்ளார்.
இதனையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் மாலை நேரத்தில் கல்யாணசுந்தரருக்கும் சங்கிலி நாச்சியார் அம்பாளுக்கும் பால், பழம் கொடுத்து மகா தீபாராதனையும் காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்கும் உற்சவ விழா நடைபெற்றுள்ளது. இந்த விழவை அடுத்து இரவு நேரத்தில் கல்யாணசுந்தரருக்கும் சங்கிலி நாச்சியார் அம்பாளுக்கும் மகிழடி சேவை நடைபெற்றுள்ளது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் உதவி கமிஷனர் சித்ரா தேவி செய்துள்ளார்.