சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுகுண்டு ஊருணியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதில் நெடுமரம் காலனி, நெடுமரம், ஜெயமங்கலம், சில்லாம்பட்டி, உடைநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடை, பரி, சேலை, வலை, வேட்டி ஆகிய பொருள்களை வைத்து ஊருணியில் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.
அதில் கெண்டை பொடி, சிலேபி, விராமீன், கெளுத்தி ஆகிய மீன் வகைகளை பொதுமக்கள் பிடித்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக 144 தடை அமலில் இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் கூட்டமாக மீன்பிடி திருவிழாக்களில் பொதுமக்கள் பங்கேற்றதால் நெடுமரம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் துறையினர் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.