சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில் சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு நாட்களில் உங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறோம் என கூறியதை பரத் நம்பி லேப்டாப்பை தேர்வு செய்து இருக்கின்றார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெலிவரி சார்ஜ் உள்ளிட்டவை முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் செலுத்துமாறு கூறியிருக்கின்றார். அதனால் ஒரு எண்ணுக்கு ரூபாய் 5000 அனுப்பி வைத்திருக்கின்றார். ஆனால் மர்ம நபர் பணம் வரவில்லை என பதில் கூற பரத் மீண்டும் மீண்டும் பணம் அனுப்பி வைத்த நிலையில் இறுதியாக அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 98620 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.