திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பு பெற்ற தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டுள்ளது இந்த தர்காவில் வருடந்தோறும் உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம் அந்த தர்காவில் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்து தர்கா ஹஜ்ரத் சம்சுதீன் கூறியதாவது, கார்த்திகை தீபத்திருநாளின் போது இதே பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். தொழில் விருத்தி, குழந்தை பாக்கியம், திருமணம் என எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த தர்கா மத நல்லினத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.