சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயர் செல்லும் இணைப்பு கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி விஜயகுமார் தூக்கி வீசப்பட்டார்.
பின்னர் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.