சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் சுமார் 350 கிலோ அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனபாதுகாவலர் கணேச லிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரகர் ஜெபஸ் தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேவிப்பட்டினத்தில் உள்ள மணல்வாடி தெருவை சேர்ந்த ஷாஜகான் (45) என்பவர் வீட்டின் பின்புறம் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாஜகான் வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 350 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஷாஜகானை கைது செய்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மீனவர்களிடம் இருந்து சிறுக சிறுக கடல் அட்டைகளை வாங்கி அதனை பதப்படுத்தி விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு 8 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.