யாசகம் பெறும் நபர் ஒருவர் சிறுக சிறுக சேமித்து தனது மனைவிக்காக ஒரு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்த சாஹு என்பவர் பிறவியிலேயே இரண்டு கால்களையும் செயலிழந்ததால் தனது கிராமத்தில் பல ஆண்டுகளாக யாசகம் பெற்று வருகிறார். இவர் யாசகம் பெறுவதற்கு அவரது மனைவி முன்னி உதவியாக உள்ளார். தனது கணவரை மூன்று சக்கர சைக்கிளில் அமர வைத்து பிறகு அந்த வண்டியை தள்ளிக்கொண்டு தம்பதிகள் இருவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் முன்னிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் வண்டியை தள்ள முடியவில்லை. இருப்பினும் தனது கணவருக்காக வண்டியை தள்ளிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர். இதை கவனித்த சாஹு மனைவிக்கு தெரியாமல் யாசகம் பெறுவதில் இருந்து சிறுக சிறுக 90 ஆயிரம் சேமித்து உள்ளார். இதையடுத்து அந்த பணத்தை கொண்டு புதிதாக மூன்று சக்கர வாகனத்தை வாங்கி அதை தனது மனைவிக்கு பரிசாக வழங்கினார். தற்போது இந்த தம்பதிகள் இந்த புதிய மோட்டார் வண்டியில் ஏறி யாசகம் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.