மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் பர்னர் தாலுகா தரோடி கிராமத்தில் கோரக் தஷ்ரத் பவடே- சஞ்சனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சென்ற 25-ஆம் தேதி நள்ளிரவு சஞ்சனா வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்தார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த அவர் தன் வீட்டிற்கு வெளியே சிறுத்தைப்புலி ஒன்று நடமாடுவதை பார்த்தார். உடனே தன் வீட்டிற்கு வெளியே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவரின் நினைவு அவருக்கு வந்தது. இதனால் சிறுத்தைப்புலியால் தன் கணவருக்கு ஆபத்து நேரலாம் என்று உணர்ந்துகொண்ட அப்பெண் சிறுத்தைப்புலியை பார்த்து பயப்படாமல் கதவை திறந்து வெளியே வந்தார்.
இந்தநிலையில் அவர் போகுவதற்கு முன்னதாகவே அந்த சிறுத்தைப்புலியானது அவரது கணவரை நெருங்கிவிட்டது. பின் சஞ்சனா கண்முன்னே உறங்கிக்கொண்டிருந்த கணவரை பாய்ந்து கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சனா கணவரின் உயிரை காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் துணிச்சலுடன் சிறுத்தைப்புலியின் வாலை கெட்டியாக பிடித்து பின் நோக்கி இழுத்தார். இந்த நேரத்தில் சத்தம் கேட்டு வளர்ப்பு நாய் அங்கு வந்து சிறுத்தைப்புலியை அது தாக்கியது. அதனை தொடர்ந்து கோரக்கின் தந்தையும் ஓடிவந்து கட்டையாலும் அங்கு கிடந்த கற்களாலும் சிறுத்தைப்புலியை தாக்கினார்.
இந்த கூட்டு முயற்சியின் பலனாக சிறுத்தைப்புலியின் பிடி தளர்ந்து அங்கிருந்து தப்பி ஓடியது. அதன்பின் தலை மற்றும் கைகளில் காயமடைந்த கோரக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பெண் சஞ்சனா “இது ஒரு அதி பயங்கரமான சூழ்நிலை ஆகும். எனினும் என் கணவரை சிறுத்தைப்புலி தாக்குவதை பார்த்ததும், எனது வலிமையையும் தைரியத்தையும் ஒன்று திரட்டி போராடினேன். இறுதியில் அதன் வாலை பிடித்து இழுத்து அதன் பிடியை தளர்த்தினேன்” என்று கூறினார்.