சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளியான சின்ன முருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் 44 நம்பர் தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென வந்த சிறுத்தை சின்ன முருகன் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றது. அப்போது முருகன் கூச்சலிட்டபடி சிறுத்தையுடன் போராடியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இதனை அடுத்த படுகாயம் அடைந்த சின்ன முருகனை தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் சின்ன முருகனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.