சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பஜார் பகுதியில் சின்னான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லமா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்லம்மா தனது பசு மாட்டை அருகில் இருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மாடு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் செல்லமா பசுமாட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்கு பின்புறம் கழுத்தில் படுகாயங்களுடன் பசு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லம்மா உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்ததில் சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் ஹேமா பசு மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். பின்னர் மாட்டின் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. அந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.