கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் செல்போன் எண் கிடைத்தது. அதற்கு தொடர்புகொண்டு அந்த பெண் பேசிபோது எதிர்முனையில் பேசியவர் என் பெயர் தாமஸ் ஆரோன் பெனா (45) எனவும் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.
அதன்பின் அப்பெண் தன் சிறுநீரகத்தை தானம் செய்வது பற்றி அந்த மருத்துவரிடம் கூறியுள்ளார். அப்போது மருத்துவர் உங்கள் சிறுநீரகத்தை தானமாக பெற்றுக் கொள்கிறோம். அதற்காக ரூபாய் 6கோடியே 20 லட்சம் தருகிறோம். ஆனால் அதற்கு முன்னதாக அறுவை சிகிச்சை கட்டணம் ரூபாய் 4 லட்சத்து 14 ஆயிரத்து 269-ஐ முன் கூட்டியே செலுத்த வேண்டும் என்று தெரிவித்து வங்கி கணக்கு எண் அனுப்பி வைத்துள்ளார். பின் நீங்கள் செலுத்தும் பணத்துடன் மொத்த பணத்தையும் தந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது குடும்ப வறுமையை கருத்தில்கொண்டு அப்பெண் தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தன் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
அதனை தொடர்ந்து அப்பெண் தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக பெற்று மருத்துவரின் வங்கி கணக்கில் ரூபாய் 4 லட்சத்து 14 ஆயிரத்து 269-ஐ செலுத்தி இருக்கிறார். இத்தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கொடுத்த பணத்தை திருப்பி வாங்கும்படி தெரிவித்து உள்ளனர். அதன்பின் தன் முடிவை மாற்றிகொண்ட அப்பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கலாம் என அவரை தொடர்புகொண்ட போது செல்போன் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் இந்த மோசடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி காவல்துறையினர் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் தாமஸ் ஆரோன் பெனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது “சிறுநீரகத்தை தானமாக கொடுப்பது பற்றி அப்பெண் ஆன்லைனில் தேடியபோது கிடைத்த செல்போன் எண்ணில் பேசிய நபர் உண்மையிலேயே மருத்துவர் தானா ( அல்லது) போலி டாக்டரா? என்பது தெரியவில்லை. அப்பெண் அவரை நேரில் பார்க்காமல் செல்போனில் மட்டுமே பேசி இருக்கிறார். தற்போது பெண் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினர்.