சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், மத்திய அரசால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜைன மதத்தவர்களை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக அறிவிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 ம் கல்வி ஆண்டில் 1-10 வகுப்பு வரை மற்றும் பள்ளி படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிசி, ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக் படிப்பு, நர்சிங், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகள் உட்பட) படிப்பவர்களாக இருக்க வேண்டும்.
பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மற்றும் தொழில்நுட்ப கல்வித்தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகையும் பெற www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவி தொகையை பெற தகுதியான மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-2021 ஆம் ஆண்டில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதற்கு முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் சம்பந்தமாக அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை திட்டம் சம்பந்தமான சந்தேகங்களை அறிய நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.