தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .
இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார. அதில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.