சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், டொம்புச்சேரி வசித்து வருபவர் சுப்பையன். இவருடைய மகன் கனிராஜா(24). இவர் கடந்த வருடம் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அந்த சிறுமியை அவருடைய வீட்டிற்கு கூட்டி சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு அவருடைய பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். சில தினங்களுக்கு முன் அந்த சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கனிராஜா, அவருடைய தாய் வசந்தி, சிறுமியின் தந்தை, தாய் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.