17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தர் பகுதியில் 21 வயது வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு 17 வயதே ஆவதால் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தை ஆகிய இருவரையும் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.