மது பிரியர்களை கவர்ந்து இழுக்கும் புதுச்சேரியில் அழகுநிலையம் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் செயல்கள் அதிகரித்து விட்டன என்பது புகார். இது குறித்து காவல் நிலையங்களிலும் ஏராளமானோர் முறையிட்டனர்.அதன் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் யோகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி நகர பகுதிகளான மறைமலையடிகள் சாலை அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை உறுதி செய்த காவல்துறையினர் 2 மசாஜ் நிலையங்களில் இருந்து 10 பெண்களை மீட்டனர். அவர்களில் 17 வயது சிறுமியும் ஒருவர். தம்மை 2 மாதமாக அடைத்து வைத்து 40 பேர் வரையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அந்த 40 பேர் மீதும் உருளையம்பாளையம் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களை இழுத்து மூடவும் காவல்துறையினர் நகராட்சிக்கு பரிந்துரைத்தனர்.
இதையடுத்து இரண்டு மசாஜ் சென்டர்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். அங்கு வந்த வாடிக்கையாளர்கள் யார் ?யார்? என்ற விவரங்களை திரட்டி உள்ள போலீசார் சிறுமியை சீரழித்தவர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் மீதான கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. தவறான செயல்கள் நடப்பது உறுதி செய்யப்பட்டால் கடை அல்லது வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் 17 வயது சிறுமியை அடைத்து வைத்து 40 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.