சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சாம்பமேடு பகுதியில் வசித்து வருபவர் அமானுல்லா கான். கூலி தொழிலாளியான இவர் திருமணமாகி சிறிது நாட்களிலேயே மனைவி அவரைவிட்டு பிரிந்து விட்டார். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்தபோது சென்ற 2020 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதியன்று அவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி ஒருவரை பாலியல் வக்கிரத்துடன் பார்த்துள்ளார். இதனால் அந்தச் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து டிவி பார்க்கலாம் என வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு இவரை தெரியும் என்பதால் சென்றுள்ளார்.
ஆனால் வீட்டிற்குச் சென்ற பொழுது டிவியை காட்டாமல் செல்போனில் பொம்மை படம் காட்டுவதாக கூறி விட்டு ஆபாச காட்சிகளை காட்டி இருக்கின்றார். இதை பார்க்க விரும்பாத சிறுமி அங்கிருந்து செல்ல முயற்சித்த பொழுது கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்திருக்கிறார். இதனால் சிறுமி சத்தம் போட்டு அழுதாள். பிறகு சிறுமியை விட்டுவிட்டார். வீட்டிற்கு சென்று அந்த சிறுமி தனது தாயாரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். இதனால் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த நாகலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் தைலா உள்ளிட்டோர் அமானுல்லா கான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்கள்.
இதையடுத்து போலீசார் ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் அமானுல்லா கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அபராத தொகையை செலுத்தாவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறி இருந்தார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாதத்திற்குள் நிவாரண நிதி ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்து இருக்கின்றார்.