பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் டாப்சிலிப் அருகே கடந்த 1-ஆம் தேதி 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் மாணவிக்கு 5-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவ பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.