பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு 18 வயது ஆகாததை அறிந்த மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தை நல குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நலக்குழுவினர் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் சிறுமி தனது உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து நெருங்கி பழகியதால் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் கைது செய்யப்பட்ட வாலிபர் எனக்கும், சிறுமி கர்ப்பம் அடைந்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். எனவே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சிறுமி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவில் சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும், கைது செய்யப்பட்ட வாலிபருக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியின் தந்தை மீது சந்தேகம் எழுந்ததால் அவருடைய டி.என்.ஏவையும் பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது குழந்தையின் டி.என்.ஏவும், சிறுமியின் தந்தை டி.என்.ஏவும் ஒன்றாக இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது வெளிவந்தது. மேலும் சிறுமியின் தந்தையை தேனி மகளிர் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.