சென்னை விருகம்பாக்கத்தில் ராஜ் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் திரையுலகம் மற்றும் நாடகங்களில் துணைநடிகராக நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த “எலி” திரைப்படத்திலும் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்தபோது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது துணைநடிகர் ராஜ், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.