Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்”…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!!!!

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே இருக்கும் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்-கலைவாணி தம்பதியரின் மகள் தர்ஷனா (10). இந்நிலையில் சென்ற இருபத்தி ஒன்றாம் தேதி சிறுமி தாய் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களின் கார் பெரம்பலூர் அருகே வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்ஷனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்சில் அழைத்து வந்த நிலையில் பல்லடம் அருகே வரும் பொழுது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து நேற்று மாலை பெற்றோர் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

அப்போது நிர்வாகத்தினர் வேலை நேரம் முடிந்து விட்டதாகவும் நாளைதான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக பிரேத பரிசோதனை செய்ய திருப்பூர் அரசு மருத்துவமனை உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Categories

Tech |