சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அவரது வயிற்றில் குழந்தை இறந்து விட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் இருந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆலமரத்துபட்டி பகுதியில் வசிக்கும் டிராக்டர் ஓட்டுனரான தினேஷ்குமார்(21) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து போகோ சட்டத்தின் கீழ் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.