திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருண்குமார் கொடுத்த தகவலின்படி காதல் ஜோடியை மீட்டு சிறுமி மைனர் என்பதால் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதனால் தங்கள் காதல் திருமணத்தை தடுத்த அருண்குமாரை கொலை செய்ய பாஸ்கரன் முடிவு செய்தார். இதனையடுத்து தனது நண்பர் ஹேம்நாத் என்பவருடன் சேர்ந்து கொண்டு தனியாக நடந்து சென்ற அருண்குமாரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ஹேம்நாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.