தண்ணீரில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிக்காடு கிராமத்தில் ராஜா என்பவர் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து ராஜாவின் மகள் ஷாலினி தனது உறவினரான மேகலா, செல்வி ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் ஷாலினி ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாரா விதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மேகலாவும், செல்வியும் அவரை காப்பாற்ற முயற்சி செய்த போது அவர்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் விரைந்து சென்று குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஷாலினியும், செல்வியும் ஏற்கனவே பரிதமாக இறந்துவிட்டனர். அதன் பின் உயிருக்கு போராடும் நிலையில் இருந்த மேகலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாலினி மற்றும் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.