கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் குப்புபிள்ளைசாவடி தெற்கு தெருவில் திருமணமான வினோத் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான வினோத் ராஜ் உடல்நிலை சரியில்லாத 17 வயது சிறுமியை ஆட்டோவில் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வந்துள்ளார். அந்த சிறுமியும், வினோத்ராஜும் பேசி பழகி வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோத் ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை தனது மனைவி என குறிப்பிட்டு, எனது மனைவியை வெளியே அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அண்ணன் போல் பழகிய நீங்கள் இப்படி பேசலாமா? என தட்டி கேட்டுள்ளார். சிறுமியின் தாயும் தகராறு செய்துள்ளார்.
அப்போது வினோத்ராஜுடன் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியின் 12-வது வார்டு கவுன்சிலருமான பன்னீர்செல்வம் சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வினோத் ராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 12,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.