திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பேட்டரி பட்டனை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் 2 வயது லித்திக்சரண். கடந்த 21ஆம் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பட்டன் பேட்டரியை விழுங்கியுள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடியபோது லித்திக்சரண் அதை விழுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவனை எக்ஸரே செய்து பார்த்தபோது தொண்டையில் பேட்டரி பட்டன் சிக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் இளஞ்செழியன் தலைமையில் டாக்டர் கமலக்கண்ணன் குழுவினர் சிறுவன் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். சிறுவனுக்கு மயக்க மருந்து அளித்து அறுவை சிகிச்சை இன்றி லாரிங்கோஸ்கோபி என்ற முறையில் பட்டன் பேட்ரியை அகற்றினர். தற்போது சிறுவன் நலமாக உள்ளார். துரிதமாக செயல்பட்டு சிறுவன் தொண்டையில் இருந்த பட்டன் பேட்டரி அகற்றிய மருத்துவ குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.