வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவனின் தந்தை வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளார். அதன்பின் சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், சிறுவனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவன் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், கடத்தல் கும்பல் கூறியுள்ளது.
இது குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தெரிந்துகொண்ட கடத்தல் கும்பல், தந்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்து காவல் துறையினரிடம் செல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இருந்தபோதும், மொராதாபாத்தில் காவல் துறையினர் தனிக் குழுக்கள் அமைத்து சிறுவனை கடத்தி வைத்திருக்கும் கும்பல் பதுங்கியுள்ள இடத்தை தேடிவருகின்றனர்.