சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
சென்னையில் உள்ள அம்பத்தூர் சித்த ஒரகடம் பகுதியில் 44 வயதான சுதர்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், 3 மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த மாதம் அம்பத்தூர் ஓம் சக்தி நகரில் வசித்து வந்த 62 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர் இணை கமிஷனரிடம் கொடுத்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுதர்சன் மற்றும் மணலி பகுதியை சேர்ந்த 55 வயதான கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சுதர்சன் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதையடுத்து தனது கணவரின் இறப்பிற்கு புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று கூறி சுதர்சனத்தின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் உறவினர்கள் என 100க்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் உதவி கமிஷனர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.