சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுழிபள்ளம் கிராமத்தில் சின்னதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சகோதரரான கலியபெருமாள் என்பவருக்கும் வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலியபெருமானின் பேரன் மணிகண்டன் என்பவர் சின்னதுரையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உணவு சாப்பிடுவதற்காக திறந்தவெளிக்கு கைதிகள் வந்தபோது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலையின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து மணிகண்டன் தப்பித்து விட்டார். இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பொன் பகத்சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கல்லாத்தூர் தண்டலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.