பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் இன்று ஆஜராகி உள்ளனர் .
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருப்பதாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து ஒரு ஆண்டு ஆன போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதன்படி கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீசார் 2 கோடி ரூபாய் லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதில் பரப்பன அக்ரஹார சிறையில் கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சசிகலா, இளவரசி, சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் உள்ளிட்ட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி இன்று இவர்கள் 7 பேரும் பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மன் அனுப்ப பட்ட நிலையில் இன்று சசிகலாவும், இளவரசியும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.