நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் என்பது தற்போது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
அதில் முதலாவது நாம் சிலிண்டரை முறையாக கையாளாமல் இருப்பதால் வெடிக்கின்றது. அதாவது சிலிண்டருக்கும் அடுப்புக்கும் பயன்படுத்தப்படும் வயர்கள் பழுதடைந்த காரணத்தினால் அல்லது எலிகள் அந்த வயர்களை கடித்து இருந்தால் அதன் மூலம் வெளியேறும் எரிவாயு மூலமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.
இரண்டாவது காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இப்போது நாம் எப்படி சிலிண்டர் காலாவதியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம். எனவே சிலிண்டர் வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.