மத்திய அரசிடம் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரை பெறுவதற்கு அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்க வேண்டும். தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆகவே பல பேருக்கு மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவது சிரமமாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காக அரசு தரப்பில் இருந்து மானியம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு சமையல் சிலிண்டருக்கான மானியம் பெற்றுக்கொள்வதற்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது உங்களுடைய ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைத்தால் மட்டுமே மானியம் கிடைக்கும். அதற்கு முன் ஆதார் கார்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்று சிலிண்டருக்கான மானியப் பணம் வருவதற்கு அந்த வங்கிக் கணக்கை சிலிண்டர் கணக்குடன் இணைக்க வேண்டும். இதில் ஆதார் கார்டை இணைக்காதவர்களுக்கு மானிய உதவியானது கிடைக்காது.
நேரடியாகச் சென்று இணைப்பதற்கு பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி. கேஸ் போன்ற சிலிண்டர் விநியோகஸ்தர்களின் வெப்சைட்டில் சென்று மானியத்துக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அருகில் உள்ள சிலிண்டர் ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். அதன்பின் நீங்கள் எந்த நிறுவனத்திடம் சிலிண்டர் வாங்குகிறீர்களோ அதன் வெப்சைட்டிலேயே விண்ணப்பம் கிடைக்கும். போன் கால் மூலம் இணைப்பதற்கு 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்களுடைய ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கி இணைக்கலாம். மேலும் SMS மூலமாகவும் இணைக்கலாம். சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு SMS அனுப்பி ஆதாரை இணைக்கலாம்.